தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள்
புதுவயல் ஸ்ரீசரசுவதி சங்கம்
முனைவர். பழ. முத்தப்பன்.
கோயிலைச் சார்ந்த குடிகளாக வாழும் நகரத்தார் மரபினர் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈட்டிய பொருளைக் கொண்டு திருக் கோயில்களையும், தமிழ் வளர்க்கும் நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிப் புண்ணியம் பெற்றுத் திகழுகிறார்கள். செட்டிநாட்டு ஊர்களில் நகரத்தார்களால் தோற்றுவிக்கப் பட்ட, தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெற்ற தமிழ் நிறுவனங்கள் பலவாகும். அதில் நூற்றாண்டை நோக்கிச் செல்லுகின்ற புதுவயல் ஸ்ரீசரசுவதி சங்கம் என்ற நிறுவனம் தமிழ் வளர்க்கும் பணியில் கடமையாற்றி வரும் நிறுவனமாகும். அதன் வரலாறும் சிறப்பும் குறிப்பிட்ட பக்க அளவில் அடங்காது என்றாலும் ஒரு அறிமுகமாக அச்சங்கம் பற்றிய செய்தியை இக்கட்டுரை தருகிறது.
சங்கத்தின் தோற்றம்
பொன்னும் கலையும் பொதுநலமும் பொங்கிப் பொலியும் புதுவயலில் இன்னரும் செல்வி கலைமகளின் இனிய பெயரால் அமைந்தது ஸ்ரீசரசுவதி சங்கம். இச்சங்கம் சாலிவாகன சகம் 1845 – கலியுகம் 5024 துந்துபி ஆண்டு ஆடித்திங்கள் ஒன்பதாம் நாள் 22 – 7 – 1922 , திங்கட்கிழமை அமாவாசை திதி, பூச நட்சத்திரம் அமிர்த சித்தயோகம் கூடிய நாளில் தோற்றுவிக்கப் பெற்றது. தோற்றுவிக்க முதன்மைக் காரணமாக அமைந்தவர்கள் அமரர்களாகிய புதுவயலைச் சார்ந்த திரு. சா. சிதம்பரம் செட்டியார், திரு. பெரி. சித. இராமசாமி செட்டியார், திரு. பெரி. அரு. பெரியகருப்பன் செட்டியார் ஆகிய மூன்று இளைஞர்கள் ஆவார்கள். இம்மூவருக்கும் பெரும்பாலும் அக்கால கட்டத்தில் பத்து முதல் பனிரெண்டு வயதுகளே எனத் தெரியவருகிறது. இன்னும் சிலரை அங்கத்தினர்களாகக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த புதுவயல் அ. மு. வீர்ப்ப செட்டியாருக்குரிய மகிழுந்து வண்டி (கார்) நிறுத்தும் கேட் என்று சொல்லப் பெறுகின்ற தனியறையில் தோன்றியது. சங்கத்தின் தொடக்கவிழாக் கூட்டம் கோட்டையூரைச் சேர்ந்த திரு. அ. ராம.அ. கருப்பஞ் செட்டியார் என்ற ஏ.கே. செட்டியாரின்; தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அன்றைய நாளில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் சங்கத்தில் இடம் பெற்றிருந்தார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் வருடம் ஒன்றுக்கு அக்கால ரூபாய் மதிப்பு பனிரெண்டு அணா ( ஒரு ரூபாய்) சந்தாவாகச் செலுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பெற்றதுடன், அக்காலச் சிறுவர் பலர் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள். இப்பொழுது சங்கத்தில் 56 உறுப்பினர்கள் உள்ளனர். ஆயுள் கட்டணம் ரூபாய் ஆயிரம் ஆகும்.
சங்கத்தின் நோக்கம்
இந்திய நாடு அடிமைப் பட்டிருந்த காலம் என்பதால் தேசிய உணர்வில் இச்சங்கம் தோற்றுவிக்கப் பெற்றிருக்கிறது. திருமுறைத் தொடராகிய ~~என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற தொடரை நோக்கமாகவும், இலச்சினையாகவும் கொண்டது. மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துவது என்றும், அதில் நாட்டுப்பற்றுக்கு உரிய செய்திகளையும் , தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் கருத்துரையாக வழங்குவதையும் வெளியிலிருந்து தமிழ் அறிஞர்களையும், தேசியத் தலைவர்களையும் அழைத்து வந்து சொற்பொருக்காற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு சங்கம் நடைபெற்று வந்தது.
வளர்ச்சி
மாதந்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சங்கம், ஆண்டு நிறைவில் ஆண்டு விழாவையும் கொண்டாடியது. முதலாம் ஆண்டு விழாவிற்குக் கண்டனூரைச் சார்ந்த ஏ. வி. ஷேஸகிரி சாஸ்திரி அவர்கள் தலைமை தாங்கியிருக்கிறார்கள். அதுமுதல் அரு. சித. இராமனாதன் செட்டியார், சொ.முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியன், சா.லெ. செட்டியப்ப செட்டியார், தி, கோமதிநாயகம் பிள்ளை, பி. பி. சங்கரகாமேஸ்வர ஐயர், பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை, ஆர்.பி. சேதுப்பிள்ளை, டி.எம். நாராயணசாமி என்ற சான்றோர்கள் ஒன்பது பேர் பத்து ஆண்டுவிழாக்களில் தலைமை தாங்கிச் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள். ஆண்டு விழாக்களில் பிற சான்றோர்களும் உரையாற்றியிருக்கிறார்கள். இவ்வாறு ஏ.கே.செட்டியார் அவர்கள் தோற்றுவித்த கைராசியில் பத்து ஆண்டுவிழாக்களைக் கண்ட சங்கம், இளைஞர்களைக் கொண்டு விளங்கியதால் கல்வியை வளர்ப்பதிலும் நாட்டம் கொண்டது. உறுப்பினர்களின் நாட்டத்தால் ஆங்கில ஆண்டு தைப் பொங்கல் நாளில் (16 – 1 – 1933 ல்) ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை என்ற பெயரில் தொடக்கப்பள்ளியைத் தோற்றுவித்தது. சங்கத்தின் வளர்ச்சியில் தொடக்கப் பள்ளிக்கெனச் சொந்தக் கட்டிடம் – அன்றையத் தமிழறிஞரும் சைவப் பெரியாருமான சச்சிதானந்தம் பிள்ளை அவர்களால் அடிக்கல் நாட்டப் பெற்று, 24 – 4 – 1939ல் செட்டிநாட்டு அரசர் மு.அ.அண்ணாமலை செட்டியாரால் திறந்து வைக்கப் பெற்றது.
தமிழ்ப் பணிகள்
சங்கம் தொடக்க காலத்தில் அறிஞர்களைக் கொண்டு தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டது. அப்பணியில் உமையாம்பிகை நவரத்தின ஆசிரியம், உய்யவந்தம்மனின் உத்தரவு என்பன போன்ற நூல்கள் வெளிவந்தன. சைவம் படிக்கக் கூடாதா? என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற கட்டுரை நூல்களும் ஆண்டுதோறும் சங்க அறிக்கைகளும், வெள்ளிவிழா, பொன்விழா, மணிவிழா மலர்களும், அறிஞர்களின் கட்டுரைத் தொகுப்புகளாக வெளியிடப் பெற்றுள்ளன. அத்துடன் தான் தோற்றுவித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி ஏற்பட, காப்பிய இலக்கியங்கள், புராண இலக்கியங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க பகுதிகளை வரையறுத்துக் கொடுத்து, மனனம் செய்யவைத்து, ஆண்டு விழாவில் உயர்ந்த பரிசுகள் வழங்கிவருகின்றது. எனவே சங்கத்தின் தமிழ்ப்பணியாக ஏடுகளைப் பதிப்பித்தல், கட்டுரை நூல்களை வெளியிடுதல், மாணவர்களுக்குத் தமிழ்ப்பற்றை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். சங்கத்தின் 92ஆம் ஆண்டில் (1- 9 – 2014ல்) வருகை தந்த சான்றோர்களின் கையொப்பம் மூலம் தற்கால அறிவியல் வளர்ச்சியில் மூலக் கையெழுத்தோடு மலர் ஒன்று வெளியிடப் பெற்றிருப்பதும் தமிழ்ப்பணியில் குறிப்பிடத் தக்கனவாகும்.
சான்றோர்கள் வருகை
சங்கம் இன்றைக்கு 95ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் காலகட்டத்தில் சங்கத்திற்கு வருகைதந்து உரையாற்றிய தேசியத் தமிழ்ச் சான்றோர்களின் பட்டியலைக் காணுகின்ற பொழுது ஒரு பிரமிப்பு ஏற்படும். சோமசுந்தர பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சி.கே. சிதம்பரநாத முதலியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், காசுப்பிள்ளை, ஆர். சீனிவாசஇராகவன், மதுரை முதலியார், ராய.சொக்கலிங்கம், பாலகவி, கி.ஆ.பெ.விசுவநாதம், சா.கணேசன், கி.வா.ஜெகன்னாதன், வை. இரத்தினசபாபதி என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முடிவு
நூற்றாண்டு விழாவை நோக்கிச் செல்லும் ஸ்ரீ சரசுவதி சங்கம் கல்விப் பணியில் இன்றைக்குப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. தமிழ்ப் பணியில் மாணவிகளுக்கு ஒப்புவித்தல் போட்டியைப்; பல நிலைகளில் வளர்த்தும் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தியும், தமிழ் அறிஞர்களை வரவழைத்து உரையாற்றச் செய்து அறிமுகப் படுத்தியும் இடையறாத தமிழ்ப் பணியைச் செய்து வருகிறது.