விவரம்
ஸ்ரீ சரசுவதி சங்கம், புதுவயல்
செட்டிநாட்டில் தமிழ் வளர்க்கத் தோன்றிய அமைப்புகளுள் நூற்றாண்டு கண்டு வளர்ந்து வரும் அமைப்பு புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கம் ஆகும். இச்சங்கம் 22.7.1922 ஆம் நாளன்று தொடங்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முன்பு தோன்றிய இச்சங்கம் பக்திப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையையும், இந்திய நாட்டின் விடுதலைக்கான பணிகளையும் செய்துவந்தது. இச்சங்கத்தின் வழியாக கதர் பிரச்சாரம், உயிர்ப்பலி தடுப்புப் பிரச்சாரம் போன்றன செய்யப்பெற்றுள்ளன. திருவிழாக்களின்போது தேவார திருவாசகம் ஓதுதல், ஆண்டுவிழாக்களில் நாடகங்களை நடத்துதல், மாதம் தோறம் தமிழ் இலக்கியக் கூட்டங்களை நடத்துதல், பாராட்டுவிழாக்களை நடத்துதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பாரதி விழா, காந்தி விழா, வ.உ.சிதம்பரனார் விழா போன்ற விழாக்களையும் தொடர்ந்து இச்சங்கம் நடத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது தமிழறிஞர்களை வரவழைத்து அவர்களைச் சிறப்புரையாற்றச் செய்து தமிழ்ச்சுவை பெருக்கி வருகிறது.


ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டுவிழாவில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட, செக்கிழுந்த செம்மல் வ. உ.சிதம்பரனார் கலந்து கொண்டு சங்கத்தின் பணிகளைக் கண்டு பாராட்டியுள்ளார்.
“1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் நடைபெற்ற புதுவயல் ஸ்ரீசரசுவதி சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீ சரசுவதி வித்யாசாலையின் மூன்றாம் ஆண்டுவிழா அவையின்கண் தலைமை வகிக்கும் பாக்கியம் பாக்கியம் பெற்றேன். வித்யாசாலையின் மாணவ மாணவிகள் அவையின்கண் நடாத்திய சம்பாஷனைகளும், நடிப்புகளும் , பாடிய பாடல்களும் எனது தெய்வ பக்தியையும், தேசாபிமானத்தையும், மொழிப்பற்றையும் ஒரே நாளில் வளர்த்துவிட்டன ” என்பது வ.உ.சிதம்பரனாரின் பாரட்டு.

தொடக்க காலத்தில் புதுவயல் அ.மு. வீரப்பச் செட்டியார், அ.ப.சி.மு. சிதம்பரம் செட்டியார், பெ.ப.வி. சிதம்பரம் செட்டியார், பெரி. சித. ராமசாமி சோட்டியார், யெ.பெரி. வீரப்ப செட்டியார் போன்றவர்களின் வீட்டின் முன்பகுதிகளில் ஸ்ரீசரசுவதி சங்கம் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தது. இதன் பின்னர் 24-4-1939 ஆம்நாள் புதுவயல் பெ.ப.வி.அரு. இராமசாமி செட்டியார், அள. பெரி.வீர. ராம. பெரியணன் செட்டியார், பெய. பெரி. வீர. வீரப்பச் செட்டியார் ஆகியோரின் நன்முயற்சியில், யெ.மு. வீதியில் தனிக்கட்டம் அமைக்கப்பெற்று இச்சங்கம் நிரந்தரமாகத் தன் சேவையை ஆற்றத் தொடங்கி இன்றுவரை நடத்தி வருகின்றது.


இவ்வாறு இச்சங்கம் ஆற்றிவரும் பணிகள் அவ்வப்போது பலராலும் போற்றப்பெற்று வருகின்றது. இச்சங்கம் செய்துவரும் திருப்பணிகளைப் பாராட்டி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களால் 2.2.2019 அன்று சைவத் தமிழ் சீர் நிலையம் என்னும் பட்டம் தந்துப் பாராட்டியுள்ளார்.
இச்சங்கத்திற்கு வருகை தந்து இதன் பணிகளுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் பல அறிஞர்கள் அளித்துள்ளனர். அறிஞர்களான பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார், டி.கே. சிதம்பரனார், கம்பனடிப்பொடி சா. கணேசனார், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார், அ.சீனிவாசராகவன், தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கனார், கி.ஆ.பெ. விசுவநாதனார், கல்கி, தந்தைப் பெரியார், மகாகவி பாரதியார், மு. வரதராசனார், அ.ச.ஞானசம்பந்தனார், நா. சுப்புரெட்டியார், கி. வா.ஜகந்நாதனார்,இரா. இராதாகிருஷ்ணனார், சுப. அண்ணாமலையார், ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, தமிழண்ணல்,முரு. பழ.இரத்தினம் செட்டியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோர் வருகை தந்து ஸ்ரீசரசுவதி சங்கத்தில் உரைநிகழ்த்தியுள்ளனர்.
இவ்வாறு பக்தியையும், தமிழையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் தன் நோக்கங்களில் வெற்றி பெற்றுவரும் ஸ்ரீசரசுவதி சங்கம் நூற்றாண்டுவிழா காணும் இவ்வேளையில் தாங்கள் மனமுவந்து கொடையளித்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இச்சங்கத்தின் வெள்ளிவிழா 10-5-1947 ஆம் நாளிலும், பொன்விழா 22.5.1972 ஆம் நாளிலும், 31-8-82 நாளிலும், எழுபதாம் ஆண்டுவிழா 9-9-1992 ஆம் நாளிலும் கொண்டாடப்பெற்றுள்ளன. இச்சங்கத்தின் நூற்றாண்டுவிழா 23-12-2022, 24-12-2022 ஆகிய நாள்களில் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது.
இந்நூற்றாண்டு விழாவின்போது, ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீசரசுவதி சங்க நூற்றாண்டுவிழா கலையரங்கம், புதுவயல் யெ.மு.சொக்கலிங்கனார் பெயரில் திறக்கப்பட உள்ளது. மேலும் யெ.மு.சொ. பழனியப்பன் அவர்களும், திரு லெட்சுமணன் சாத்தப்பன் அவர்களும் கொடையுள்ளத்துடன் கட்டித்தந்த ஸ்ரீசரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி மேல் மாடிக் கட்டமும் திறக்கப்பட்டது.
ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை தொடக்கப்பள்ளி, புதுவயல்
ஸ்ரீசரசுவதி சங்கம் பக்தி, இலக்கிய,மொழி வளர்ச்சிப் பணிகளுடன் அறிவு புகட்டும் கல்விப் பணிசெய்யவும் முன்வந்தது. 16-1-1933 ஆம் நாளன்று ஸ்ரீசரசுவதி வித்யாசாலை என்னும் பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து தொண்ணூறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.



புதுவயல் ஸ்ரீசரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி முதலில் யெ.மு. வீதியிலும், அதன்பின் நடுவீதியில் உள்ள யெ.மு. அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த யெ.மு. சொக்கலிங்கம் அவர்களின் கட்டத்திலும், தற்போது யெ.மு.சொ அவர்களின் மகனார் திரு.யெ.மு.சொ. பழனியப்பன் அவர்கள் பள்ளியின் பெயருக்கே தந்துதவிய நிலத்திலும், அவர்கள் தம் பெற்றோரான யெ. மு. சொக்கலிங்கம் செட்டியார், திருமதி சரோஜா ஆச்சி அவர்களின் கட்டடத்திலும் நடந்துவருகிறது. தற்போது இக்கட்டடத்தின் மேற்பகுதியில் வகுப்பறைக் கட்டடங்கள் திரு யெ.மு.சொ. பழனியப்பன், திரு லட்சுமணன் சாத்தப்பன் அவர்களின் அருங்கொடையாலும் கட்டப்பெற்று, காலச் சூழலுக்கு ஏற்ப ஆங்கிலவழிக் கல்வி பயிலவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பெற்றுள்ளன. மழலையர் வகுப்புகள் நிர்வாகப் பொருளுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இக்கட்டடத்தின் தளத்தினை வண்ணக்கல் பதிக்க யெ.மு. வி.முத்தப்பன் அவர்களின் நினைவைப் போற்றி அவர்களின் குடும்பத்தார் கொடையளித்துள்ளனர்.
ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் கல்வி அமைப்பான ஸ்ரீ சரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளியாக இருந்து, நடுநிலைப் பள்ளியாக வளர்ந்து, அதன்பின் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகப் பெருகி, தற்போது பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக வளர்ந்து நிற்கிறது. இதன் வளர்ச்சி பெண்களுக்கான கல்லூரியாக இன்னும் செழிக்கவேண்டும்.

1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது நாற்பது ஆண்டுகளைக் கடந்து நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றியை ஆண்டுதோறும் பெற்று பெண்களின் கல்வி முன்னேற்றத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. நல்லாசிரியர்களும், நல்ல கட்டட அமைப்பும், நூலகமும், கணினி ஆய்வகமும், ஆய்வகமும் கொண்டு அமைக்கப்பெற்றுள்ள இக்கல்வி நிறுவனம் தமிழக அளவிலும், சிவகங்கை மாவட்ட அளவிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கி வருகின்றது. இப்பள்ளியில் பயின்ற மாணவியர்கள் பேராசிரியர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, வெளிநாட்டில் பல பணிகள் புரிபவர்களாக விளங்கிவருகின்றனர்.
அருள்மிகு சரசுவதி கோயில்
ஸ்ரீசரசுவதி சங்கம் தெய்வ பக்தியை முன்வைத்தே அனைத்துப்பணிகளையும் செய்து வருகின்றது. தொடக்கத்தில் ஸ்ரீசரசுவதியின் படத்தை மையமாக வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது. வெள்ளியால் ஆன சரசுவதி உருவாக்கப்பெற்று சரசுவதி பூசை அன்று தேரில் பவனி வரும் நிகழ்வு ஆண்டுதோறும் நடந்துவருகிறது. தற்போது ஸ்ரீசரசுதிக்கென தனிக்கோயில் சித. அரு. வீரப்பசெட்டியார் அவர்களின் பெயரில் அவரின் மகனார் சி.பழ. சித. அரு. வீர. அருணாசலம் செட்டியார் அவர்களால் நிர்மானிக்கப்பெற்று அதன் திருக்குட நீராட்டுடன் இந்நூற்றாண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம் பெற்றன. ஸ்ரீசரசுவதி சங்கத்தில கோயில் கொண்டுள்ள அருள்மிகு கணபதிக்கும், ஸ்ரீசரசுவதிக்கும் நாள்தோறும் வழிபாடு நடைபெற்றுவருகிறது. இத்தெய்வ உருவங்களுக்கு வெள்ளிக் கவசமும் தற்போது செய்யப்பெற்றுள்ளது.





புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தை உருவாக்கிய சான்றோர்



ஸ்ரீசரசுவதி சங்கம், வித்தியாசாலை கட்டடம் எழுப்பிய சான்றோர்



பள்ளி நிர்வாகிகள்

நிர்வாக குழு தலைவர்







செயலர்



தலைமை ஆசிரியை


உதவி ஆசிரியை


அறங்காவலர்கள்

President

Secretary

Treasurer

Vice President

Joint Secretary

Trustee

Trustee

Trustee

Trustee

Trustee

Trustee
